2009 ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி ஷோகம் ஷா இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படமான “லக்” மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். பிரபல நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் திரையுலகிற்கு வந்து இன்றோடு பதினோரு ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இவரது ரசிகர்கள் இந்த நிகழ்வை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இணையதளத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “சரோஜா” படத்தில் அறிமுகமாக வேண்டிய ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்க முடியாத காரணத்தால், 2010 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “ஏழாம் அறிவு” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
இதற்கு முன்னரே தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய ஸ்ருதிஹாசன் தொடர்ந்து இந்த மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பின்பு தமிழில் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய வெற்றித் திரைப்படங்களில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடிகர் மட்டுமல்லாது பாடகர் மற்றும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இளையராஜா இசையில் “தேவர் மகன்” படத்தில் ‘போற்றிப் பாடடி பொன்னே’ பாடலைப் பாடியதிலிருந்து, “கடாரம் கொண்டான்” படத்தில் ஜிப்ரான் இசையில் பாடியது வரை, இவர் குரலில் பல பாடல்கள் திரையுலகில் வெளிவந்துள்ளது.
தன் தந்தை கமலஹாசன் படமான “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்த ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் சிறந்த அறிமுக இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார்.
தொடர்ந்து பல சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்ற ஸ்ருதிஹாசன், திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு பதினோரு ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.இந்த மகிழ்ச்சியை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.