“சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன்”… கே.வி.ஆனந்தின் மறைவு குறித்து சிம்புவின் உருக்கமான அறிக்கை!

  • April 30, 2021 / 04:41 PM IST

சினிமாவில் பாப்புலர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். இன்று (ஏப்ரல் 30-ஆம் தேதி) கே.வி.ஆனந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தற்போது, இது தொடர்பாக நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். ‘கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்து விட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus