தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உருவெடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு. இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் அவர்களின் மூத்த மகனான சிம்பு சமீபத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற கௌதம் வாசுதேவ் மேனன் குறும்படத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற சுந்தர்.சி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சிம்பு. இதையடுத்து ஓவியா நடிப்பில் வெளியான “90ml” திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போது யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் “மகா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” எனும் படத்தில் நடித்துவருகிறார்.
லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “மாநாடு” படத்தில் பெயருக்கேற்றார் போல அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிரமம் இருப்பதாக வெங்கட்பிரபு மற்றும் திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
இதனால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்பு இயக்குனர் மிஷ்கினுடன் ஒரு படத்தில் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.
ஏற்கனவே மிஷ்கின் அருண்விஜய் வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்தி வெளியாகியிருந்தது, ஒருவேளை இந்தப் படம் தாமதமானால் இவர் சிம்புவை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் இயக்கலாம் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மாநாடு படம் தாமதமாவதால் சிம்புவும் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் சிம்பு ஸ்ருதி ஹாசன் ஜோடி இணைந்தால் இதுவே முதல் படமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.