தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” எனும் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி லாக்டவுன் நாட்களில் பல இயக்குனர்கள் தங்கள் கதைகளுடன் சிம்புவை அணுகி வருகிறார்கள். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கலாம் என்ற செய்தியும் வெளிவந்தது.
இது மட்டுமின்றி “மஃவ்டி” படத்தின் தமிழ் ரீமேக் மற்றும் வடிவேலுடன் சில படங்கள் என்று சிம்பு படுபிஸியாக இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கவுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் சச்சி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் ஏற்கனவே இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் பிஜு மேனன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபனை நடிக்க வைப்பேன் என்று கூறியிருந்தாராம்.
இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் சிம்புவுடன் இணைந்து ஒரு ஒரு புதிய சவாலான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தார். தற்போது சிம்புவும் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியானதால் இது ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்தான் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தில் பிருத்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.