கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரசிகரை நடிகர் சிம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 5,409 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 1547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் சிம்பு நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் சிம்பு ஆனந்தனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக சிதம்பரம் மருத்துவமனையில் அவர்,சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த நடிகர் சிம்பு மற்ற நிர்வாகிகள் மூலம் சிம்பு ஆனந்தனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உடல்நலம், சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்த சிம்பு மனதைரியத்தை கைவிட வேண்டாம் என்று ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். மேலும் விரைவில் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாகவும் ரசிகரிடம் பேசியுள்ளார்.