விஜய்யை வைத்து ‘பகவதி, ப்ரியமுடன்’ ஆகிய படங்களை இயக்கிய ‘லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ வி.சுவாமிநாதன் சமீபத்தில் ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) இவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். ‘லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘அன்பே சிவம்’, தனுஷின் ‘புதுப்பேட்டை’, அஜித்தின் ‘உன்னைத் தேடி’, சூர்யாவின் ‘உன்னை நினைத்து’, சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ போன்ற பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன், ‘பகவதி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மகன் தான் ‘கும்கி, பாஸ் (எ) பாஸ்கரன்’ புகழ் நடிகர் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, தயாரிப்பாளர் சுவாமிநாதன் தொடர்பாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தயாரிப்பாளர் சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.
நட்புக்கு இலக்கணமானவர். ‘சிலம்பாட்டம்’ பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார். நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால், இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரென தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது. அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்த காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன்” என்று சிம்பு கூறியுள்ளார்.
https://twitter.com/STR_360/status/1293168886951501825