நித்தின், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெங்கி குடுமுலா இயக்கத்தில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் “பீஷ்மா”. இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்ற மூன்று படங்களில் இதுவும் ஒன்று. பீஷ்மா திரைப்படத்தை இயக்கிய வெங்கி குடுமுலா இதற்கு முன்னதாக “சலோ” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பெரும் வெற்றி அடைந்தது.
இந்நிலையில் பீஷ்மா திரைப்படம் Netflix தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் netflix மூலமாக இப்படத்தை பார்த்து புகழ்ந்து வருகிறார்கள். பல சினிமா நட்சத்திரங்களும் பீஷ்மா படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அழைத்து, அவரது பாராட்டினை தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் “சிவகார்த்திகேயன் எனது படத்தை பார்த்து என்னிடம் பேச வேண்டும் என்று கூறி, எனது தொலைபேசி எண்ணை நண்பர்களிடம் கேட்டு வாங்கியுள்ளார். அவர் என்னை அழைத்து என்னிடம் பீஷ்மாவை பற்றி புகழ்ந்து பேசியது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது” என்று கூறினார்.
மேலும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் இயக்குனர் வெங்கி குடுமுலா தனது சொந்த ஊரான அஸ்வரோபேட்டா, கம்மம் மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார். இந்த நேரத்தை தனது அடுத்த படத்திற்கான கதையை உருவாக்குவதிலும், ஹீரோவின் கேரக்டரை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்படுவதாக கூறியுள்ளார்.
அதே சமயம் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கு படத்தின் இயக்குனருக்கு தாமாக முன் வந்து வாழ்த்தி இருப்பது இதுவே முதல் முறை. மேலும் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. தெலுங்கில் கால் பதிக்க போகிறாரா சிவகார்த்திகேயன்? பொறுத்திருந்து பாப்போம்!