தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா, 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார்.
இதில் அவரது தந்தை ரஜினிகாந்தே நடித்திருந்தார். ‘கோச்சடையான்’ படத்துக்கு பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். 2010-யில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்த சௌந்தர்யா, அவரை 2017-யில் விவாகரத்து செய்துவிட்டு 2019-ஆம் ஆண்டு விஷாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே, சௌந்தர்யா – அஷ்வின் தம்பதியினருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில், விஷாகன் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறதாம்.
நேற்று முன் தினம் (செப்டம்பர் 20-ஆம் தேதி) சௌந்தர்யாவின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, சௌந்தர்யா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன், தனது மகன் வீர் மற்றும் தந்தை ரஜினியுடன் இருக்கும் ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார்.