“மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாக ‘லாபம்’ இருக்கும்”… தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இதில் ஷாம், அருண் விஜய் , குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார்.

தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இயக்கியுள்ள புதிய படமான ‘லாபம்’-யில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் நடித்துள்ளார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த படத்தின் எடிட்டிங் பணியில் பிஸியாக பணியாற்றி கொண்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றிருக்கிறார். பின், நீண்ட நேரம் ஆகியும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்திற்கு வராததால், அவருடைய உதவி இயக்குநர் வீட்டுக்கே சென்றுள்ளார்.

அங்கு எஸ்.பி.ஜனநாதன் சுய நினைவின்றி இருந்ததை அடுத்து அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு ICU-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மார்ச் 14-ஆம் தேதி எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார். தற்போது, ‘லாபம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான், எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சி இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து. ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Share.