சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் ‘மாநாடு’. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.
‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், மாநாடு படக்குழு, என் தாய், தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என் இரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால் பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே… ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடக்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடி தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ளார்.