ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய சூர்யாவுக்கு அழைப்பு… பாராட்டி ட்வீட் போட்ட மு.க.ஸ்டாலின்!
June 29, 2022 / 08:02 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.
இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
இவ்விரண்டு படங்கள் மட்டுமில்லாமல் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ பார்ட் 3-யிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இதில் சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம். இந்நிலையில், ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய சூர்யாவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலக அளவில் 397 திரையுலக பிரபலங்களுக்கு உறுப்பினராக இணைய ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்திருக்கிறதாம்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என்று கூறியுள்ளார்.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!