திரைத்துறை சங்கங்களுக்கு நிதியுதவி… சொன்னதை செய்து காட்டிய சூர்யா!

  • August 28, 2020 / 07:45 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்யப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையில் “சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு, ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன். பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் ‘கொரோனா யுத்த களத்தில்’ முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, ரூ.80 லட்சத்தை ஃபெப்சி அமைப்பிற்கும், ரூ.20 லட்சத்தை இயக்குநர்கள் சங்கத்திற்கும், ரூ.30 லட்சத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ரூ.20 லட்சத்தை நடிகர் சங்கத்திற்கும் சூர்யா கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus