முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல், அருவா’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என மூன்று படங்கள் லைன்-அப்பில் இருக்கிறது. தற்போது, முன்னணி தெலுங்கு இயக்குநருடன் சூர்யா கூட்டணி அமைக்கப்போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘அல வைகுந்தபுரமுலோ’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தது. இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் சமீபத்தில், நடிகர் சூர்யாவிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போனதால் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகுமாம்.