தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகும் சூர்யா தயாரித்துள்ள 4 படங்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம். சூர்யா வக்கீலாக நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது, இந்த படத்தை வருகிற நவம்பர் மாதம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தவிர சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரித்து வரும் ‘ஓ மை டாக்’ படம் டிசம்பர் மாதமும், ‘உடன் பிறப்பே’ படம் அக்டோபர் மாதமும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் செப்டம்பர் மாதமும் ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகவுள்ளதாம். இதில் சரோவ் சண்முகம் இயக்கும் ‘ஓ மை டாக்’ படத்தில் அருண் விஜய்யும், அவரது மகன் ஆர்ணவ்வும் நடிக்கின்றனர். சரவணன் இயக்கும் ‘உடன் பிறப்பே’ படத்தில் சசிக்குமாரும், ஜோதிகாவும் நடிக்கின்றனர். அரிசில் மூர்த்தி இயக்கும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ரம்யா பாண்டியனும், வாணி போஜனும் நடிக்கின்றனர்.

Share.