முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்து 2020-ஆம் ஆண்டு OTT-யில் ரிலீஸான படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார், காளி வெங்கட், அச்யூத் குமார், ஞானசம்பந்தம், வினோதினி வைத்யநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, ‘பூ’ ராமு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியிருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. சுதா கொங்கராவே இயக்கி வரும் இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்கிறார். இன்று சூர்யா தனது எக்ஸ் தளத்தில் இதற்கு ‘சர்ஃபிரா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும், படத்தை வருகிற ஜூலை 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Dream so Big, they call you Crazy!!#Sarfira releasing in cinemas on 12th July, 2024. https://t.co/hUgNo6fuaa pic.twitter.com/rOtlhZQSV6
— Suriya Sivakumar (@Suriya_offl) February 13, 2024