ஹிந்தியில் ரீமேக்காகவுள்ள சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

  • July 12, 2021 / 03:26 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்து கடந்த ஆண்டு (2020) நவம்பர் 12-ஆம் தேதி OTT-யில் ரிலீஸான படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார், காளி வெங்கட், அச்யூத் குமார், ஞானசம்பந்தம், வினோதினி வைத்யநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, ‘பூ’ ராமு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தனர். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள்.

தற்போது, இப்படம் ஹிந்தி மொழியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சூர்யாவே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘அபுண்டன்டியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவே தனது ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்க உள்ள ஹிந்தி வெர்ஷனையும் சுதா கொங்கராவே இயக்க உள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus