2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன். தற்போது இவர் இயக்கத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நகரும் ஒரு திரில்லர் கதை வெளிவரப் போவதாக செய்தி வந்துள்ளது.
நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த பான்டெமிக் தொடர்பான திரில்லர் கதையில் நடிகர் ஜெய் நடிக்கப் போவதாகவும், இவருக்கு ஜோடியாக பிரபல செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்கவுள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இவருடன் தடம் திரைப்படப் புகழ் ஸ்முர்த்தி வெங்கடேஷ், ஹரிஷ் உத்தமன், பாலசரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.
அஜேஷ் இசையில் இந்த படத்தின் காட்சிகளை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்ட நிலையில், அரசு அனுமதி அளித்த உடனேயே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம் மற்றும் தேனி ஊர்களை சுற்றி எடுக்கப் போவதாகவும் செய்தி வந்துள்ளது. இயக்குனர் சுசீந்திரனின் ஊர் ஒட்டன்சத்திரம் என்பதால் அவரின் பெரும்பாலான படங்களில் இந்த ஊரைச் சுற்றியே அவர் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்.
அதுமட்டுமின்றி இயக்குனர் பாரதிராஜா மற்றும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோருக்கு சொந்த ஊர் தேனி. எனவே இந்த இரண்டு ஊர்களை சுற்றி இந்த படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படத்தில் யாருக்கும் சம்பளம் இல்லை என்றும் படத்தில் வரும் லாபத்தை அனைவரும் பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.