இந்தியில் பிரபலமான திறமையான நடிகராக இருந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி இருந்தன . இதன் பிறகு மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது .
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார் . இது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது .
இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், “சுஷாந்த் சிங் மறைந்த அன்று எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு 5 சடலங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன, உடற்கூராய்வு செய்வதை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் உடலை போலீசாரிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறியுள்ளார்.