கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நிலைமை சரியாகி வருவதால் படிப்படியாக அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு திரைப்பட படப்பிடிப்புகள் எடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் “பெல்பாட்டம்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு திரைப்படக் குழு மும்பையில் இருந்து கிளம்பி சென்றுள்ளது.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் ‘தலைவாசல்’ விஜய் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதால் அவரும் தற்போது படக்குழுவினருடன் இங்கிலாந்திற்கு சென்று வந்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது ” லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றது புது அனுபவமாக அமைந்தது. லண்டன் விமான நிலையத்தில் யாருமே எங்களை வரவேற்க வரவில்லை. எங்கள் லக்கேஜ்களை நாங்களே எடுத்துக்கொண்டு இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு ஹோட்டலுக்கு சென்றோம். அனைவரும் தனிமையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அது மட்டுமின்றி ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனி மருத்துவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். படப்பிடிப்புக்கு முன்னர் முழு சோதனை நடத்தப்பட்டு பின்பே அனுமதி அளித்தார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
பெல்பாட்டம் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அவர் பேசியபோது “ஜங்கிள் திரைப்படத்தை தொடர்ந்து நான் இரண்டாவதாக நடிக்கும் பாலிவுட் திரைப்படம் இதுதான். இந்த படத்தில் நான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இது ஒரு முக்கிய கதாபாத்திரமாக இந்த படத்தில் இருக்கும். இந்த படம் ஒரு உண்மை சம்பவம் குறித்த கதையை கொண்டது. இதற்குமேல் நான் படம் குறைத்தோ அல்லது என்னுடைய கேரக்டர் குறித்தோ சொல்லக்கூடாது” என்றிருக்கிறார் விஜய்.