தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சூர்யா செய்தி வெளியிட்டிருந்தார்.
இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் வெளியான “பொன்மகள்வந்தாள்” திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில், சூர்யா மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த எந்த திரைப்படத்தையும் இனிமேல் எங்கள் திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதன்பின்னர் சூரரைப்போற்று திரைப்படத்தின் முக்கியத்துவம் அறிந்து அதை திரையரங்கில் வெளியிட ஒப்புக் கொண்டார்கள். இந்நிலையில் தற்போது சூர்யா இந்தப் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று குறிப்பிட்டதையடுத்து பிரபல திரைப்பட பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த லாக்டவுனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் திரையரங்கு உரிமையாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள். இந்நிலையில் சூர்யா எங்களுக்கு ஆதரவாக இல்லாமல், இப்படி லாபத்தை எண்ணி செய்துவிட்டார். இது சரியான முடிவல்ல. இதனால் வருங்காலத்தில் அவரது படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது”என்று எச்சரித்துள்ளார்.
இனிமேல் நீங்கள் எவ்வளவு பெரிய படம் நடித்தாலும் உங்கள் படம் எங்கள் தியேட்டரில் வெளியாகாது என்று பல உரிமையாளர்கள் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்களாம். நடிகர் சூர்யாவின் படங்கள் இனிமேல் திரையரங்கில் வெளியாகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.