டொரண்டோ சர்வதேச விருது விழாவில் பங்கேற்கும் தமிழ் படம்!

  • June 24, 2020 / 06:34 PM IST

நாடெங்கும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால், ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட மாஸ்டர் உள்பட ஏராளமான படங்கள் வெளியாகாமல் உள்ளன. திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் சில படங்களை தயாரிப்பாளர்கள் ஒடிடி தளத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட “தாய்நிலம்” என்ற படத்தை அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இந்தப்படம் லாக்டவுன் முடிந்ததும் வெளிவரவிருந்தது. அதற்கு முன்னரே படக்குழுவால் இந்தப் படம் டொரண்டோ சர்வதேச விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த படம் விழாவில் பங்கேற்க டொரண்டோ விருதுகள் வழங்கும் குழு தேர்வு செய்துள்ளது.

நேமி புரோடக்சன் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடித்திருக்கும் படம் “தாய்நிலம்”. இவர் மலையாள திரைப்படவுலகில் சிறந்த நடிகராவார். இலங்கையின் பிரச்னைகளில் இருந்து தப்பித்து தமிழகத்தில் அடைக்கலம் நாடும், ஒரு தந்தை மகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை இந்த படம் எடுத்து உணர்த்துகிறது. முதலில் இந்த படத்திற்கு “பயணங்கள் தொடர்கிறது” என்று தான் தலைப்பிட்டார்களாம். ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் “தாய்நிலம்”என்று மாற்றிவிட்டார்கள்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் அபிலாஷ் கூறியதாவது” உலகம் முழுவதும் பறந்து விரிந்திருக்கும் இனம் நம் தமிழினம். பக்கத்து நாட்டிலுள்ள நம் சகோதரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நம் நாடு தாய் நிலமாகும். ஒரு தந்தை மகளுக்கு இடையேயுள்ள அழகான பாசத்தை இந்தப்படம் எடுத்துக் கூறும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளரான அவுசெப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் டொரன்டோ மட்டுமல்லாது பல சர்வதேச விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஆழமான கருத்துக்களை கொண்ட இந்த அழகிய திரைப்படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடப்படும் என திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags