கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டோன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் சினிமாவில் வேலை செய்யும் கடைசி கட்ட தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவி செய்ய திரைப்பட சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனக்கு உண்பதற்கு உணவில்லை மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு கஷ்டப்பட்டு வருவதாக தமிழ் படத்தில் நடித்திருக்கும் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான “தூறல் நின்னு போச்சு” படத்தில் அறிமுகமாகி பின்பு இன்று போய் நாளை வா, கிழக்குச்சீமையிலே, மண்வாசனை போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சூர்யகாந்த். இவர் சுமார் 300 திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், தனக்கு சர்க்கரை நோய் போன்ற பல வியாதிகள் இருப்பதால் மாதம் ரூபாய் 1500 மருந்துகளிலேயே செலவாகி வருவதாகவும், அதனால் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் உருக்கமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவ்வப்போது பெரிய நடிகர்கள் உதவி வந்தாலும், அந்த பணம் போதியதாக இல்லை பலரும் அதனால் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.