ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”. ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா நடித்திருந்தார்கள். அதுவரை ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த மோகன் ராஜா இந்த படத்தின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இந்தப் படம் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிக முக்கிய அம்சமாக அமைந்தது இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம்தான்.
இந்த படத்தில் ஹீரோவுக்கு நிகரான சிறப்பம்சங்களை சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்திற்கு இயக்குனர் கொடுத்திருந்தார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.
ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை கோபிகிருஷ்ணா எடிட்டிங் செய்து இருந்தார். இவை இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் மக்களை மிகவும் கவர்ந்தது.
முதலில் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்திற்கு நடிகர் மாதவனை மோகன்ராஜா அணுகியதாகவும் அவர் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாத காரணத்தால் மட்டுமே அதில் அரவிந்த்சாமி நடித்திருந்தார் எனவும் செய்தி வந்துள்ளது.
ஹீரோவை விட முக்கியத்துவம் கொண்ட இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை தவற விட்டுவிட்டோமே என்று மாதவன் பிறகு வருத்தப்பட்டாராம். அரவிந்த்சாமியின் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.