கலையும் இலக்கியமும் இரண்டறக் கலந்து அரசியலின் ஆணிவேராக இருந்த, இருக்கின்ற இந்தச் சூழலில் திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டும் அல்ல. திரைப்படமானது அரசியலைத் தீர்மானிக்கிறது; பண்பாட்டை வடிவமைக்கிறது; பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது; தனிநபரின் மனநிலையைக் கட்டமைக்கிறது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சினிமாக்களைத் தயாரிக்கும் நாடு இந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்திய சினிமா தயாராகிறது. உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள ‘ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ஆறு மாதத்திற்குள்ளாகவே, லூமியர் சகோதரர்கள் அதனை இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஹோட்டலில் திரையிட்டுக் காட்டினர்.
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது. இதை இயக்கியவர் தோர்னே. இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ அவர்களின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியா வின் முதல் முழு நீளத் திரைப்படம்.
ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது. இதன்படி பார்த்தால் இந்திய சினிமாவுக்கு வயது 107 வயதாகிறது.