நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் அனைவரது தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு துறையும் உள்ளடங்கும்.
நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அதுமட்டுமின்றி திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியிடப்படுவதற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி வருகிற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. தற்போது மற்ற நாடுகளில் படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருவதால், இங்கேயும் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் மக்கள் கூட்டம் கூடும் எந்த இடத்தையும் திறப்பதற்கு தமிழக அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதியின் பிகில் திரைப்படம் மட்டுமல்லாது ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தாராள பிரபு” படமும், மலேசியாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது மலேசியாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே லாக்டோன் நடைபெற்றதால் சரியான வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்றும், தற்போது இந்த படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்தார். பாலிவுட்டின் வெற்றிப்படமான “விக்கி டோனர்” படத்தின் ரீமேக்தான் இந்த படம்.
இது உண்மையெனில் மகிழ்ச்சியே!! https://t.co/bsL49q07JA
— Vivekh actor (@Actor_Vivek) July 17, 2020
ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற அதிகாரபூர்வமான தகவலுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.