சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கிய முதல் படமான ‘ஆரண்ய காண்டம்’ 2011-ஆம் ஆண்டு வெளியானது. இதில் சம்பத் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம், மாஸ்டர் வசந்த், அஜய் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இப்படத்துக்கு பிறகு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இதில் மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, மிஷ்கின், ஃபஹத் ஃபாசில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நேற்றுடன் (ஜூன் 10-ஆம் தேதி) ‘ஆரண்ய காண்டம்’ படம் வெளி வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#10YearsOfAaranyaKaandam’ என்ற ஹேஸ் டேக் ட்ரெண்டாகி வந்தது. தற்போது, இது தொடர்பாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் “வணக்கம். நான் தியாகராஜன் குமாரராஜா ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குநர். ‘ஆரண்ய காண்டம்’ வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் முடியுது.
அதையொட்டி Twitter Spaces-லையும், Club House-லையும் கலந்துரையாடல்கள் நடக்கிறதா நண்பர்கள் சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி. என்னால அதுல கலந்துக்க முடியல. அதுக்கு என்னுடைய மன்னிப்பு. அதுக்கு பெரிய காரணங்கள்லாம் ஒன்னும் இல்ல. அந்த படத்தை பற்றி புதுசா பேச என்கிட்ட ஒன்னும் இல்ல.
அதுனால பேசி நான் யாருடைய நேரத்தையும் வீணடிக்க விரும்பல. ஆனால், பத்து ஆண்டுகளுக்கு பின்னாலும் அது இன்றும் நினைவுகூறப்படுகிறது. அது இன்னும் மக்களை மகிழ்விக்குது அப்படிங்குறது எனக்கு என்னுடைய தொழிலை நான் நேர்த்தியா பண்ணியிருக்கேன் அப்படிங்குற ஒரு மனநிறைவை கொடுக்குது. உங்களுடைய அன்புக்கு என் உளமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
ICYMI: #ThiagarajaKumaraja On #10YearsOfAaranyaKaandam Spaces and Clubhouse discussions! pic.twitter.com/TQofRV4W8K
— சினிமா விகடன் (@CinemaVikatan) June 10, 2021