1997 ஆம் வருடம் நாகராஜன் இயக்கத்தில் வெளியான “அரவிந்தன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரத்னவேலு என்கிற ராண்டி.
இவர் தமிழில் சேது, நந்தா, ஜெயம் பேரழகன், மாயாவி, டேவிட், எந்திரன், லிங்கா என புகழ்பெற்ற பிரம்மாண்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களையும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் புகழ்பெற்ற மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பாம்பே” படத்தில் அவருடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளியான “எந்திரன்” படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தது மூலம் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற ரத்தினவேலு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து “இந்தியன்2” படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ரத்னவேலு தமிழ் மற்றும் தெலுங்கில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய தனது கருத்தை பதிவிட்டு வந்தார். அப்போது உலக நாயகன் கமல்ஹாசனை பற்றி ஒரு கேள்வி எழுந்தபோது, கமல்ஹாசனின் நடிப்பு திறமை மிகவும் பாராட்டுதற்குரியது இவர் நம் நாட்டின் “அல் பசினோ” போன்று என்று அவரைப் பாராட்டி பேசியிருந்தார்.
இதுவே முதல் முறையாக ரத்தினவேலு உலக நாயகனுடன் பணிபுரிந்து வருகிறார் என்றாலும் கமல்ஹாசனைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார். மேலும் கமல் ஒரு ஜீனியஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “இந்தியன்2” திரைப்படத்தில் இவருடன் காஜல்அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக், சித்தார்த் மற்றும் வித்யூத் ஜம்வால், டெல்லி கணேஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.