தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் OTTயில் வெளியாவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பலர் இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் இவருக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில், பிரபல முன்னணி இயக்குனரான பாரதிராஜா இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது ” திரு சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படம் ஓடிடியில் வெளிவரக் கூடாது என்று உங்கள் எண்ணம் நல்லதுதான். அதேநேரம் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முடங்கி உள்ளது அதை திரையரங்கில் வெளிக்கொண்டு வருவதற்கு போராடுவீர்களா? தயாரிப்பு தொழிலும் சுதந்திரம் இருக்க வேண்டும். யாரையும் யாரும் கட்டுப்படுத்தக் கூடாது.
என் நண்பர் சிவக்குமாரின் வளர்ப்பை கண்டு நான் எப்பொழுதும் வியந்துள்ளேன். நடிகர் சூர்யாவும் கார்த்தியும் என் முற்றதின் முன் வளர்ந்த பிள்ளைகள் போல அவர்கள் ஒழுக்கம் குறித்தும் பண்புகள் குறித்தும் நான் அறிவேன். அவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள் போல அவர்களை வளர விடுங்கள். எந்த ஒரு கலைஞனயும் காயப்படுத்தாதீர்கள். திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் அனைவரும் வாருங்கள் பேசித் தீர்ப்போம். கொரோனா பாதிப்பால் மக்கள் இடைவெளியுடன் படத்தை காண ஓடிடி நல்ல தளமாக இருக்கும் என்று சூர்யா ஒரு நல்ல எண்ணத்தோடு இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் சூரரைப்போற்று திரைமுன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்கும்” என்று நடிகர் சூர்யாவின் இந்த முடிவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
— Bharathiraja (@offBharathiraja) August 26, 2020