முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த ‘சிட்டிசன்’ குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவண சுப்பையா இதனை இயக்கியிருந்தார். மிகப் பெரிய ஹிட்டான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது நடிகை சமீரா ரெட்டியாம். அவர் சில காரணங்களால் விலகிய பிறகே வசுந்தரா தாஸ் ஒப்பந்தமானாராம்.