தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் பட்டியலில் மிஷ்கின் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென்று தனி பாணி வைத்திருக்கிறார். அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா, ராம், மிஸ்கின், பூர்ணா ஆகியோரை வைத்து “சவரக்கத்தி” என்ற படத்தை இயக்கி 2018ம் ஆண்டு வெளியிட்டார்.
இந்த படத்தை எழுதி தயாரித்தது இயக்குனர் மிஷ்கின். அரோல்கரோலி இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து “கண்ணாமூச்சி” என்ற வெப்சீரிஸை ஆதித்யா இயக்கியிருந்தார்.
தற்போது மீண்டும் தனது சகோதரர் மிஷ்கின் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு “பிதா” என்று பெயரிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே அருண்விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “பாக்ஸர்” திரைப்படத்திற்கு வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட மதியழகன் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்படவுள்ளார். தயாரிப்பாளராக இருந்த மதியழகன் வில்லனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உருவாகவுள்ளார். இவருக்கு ஜோடியாக இந்தப்படத்தில் அனுகீர்த்தி என்பவர் நடிக்கவுள்ளார்.
ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் சாம்பியன் பட்டம் பெற்றவர்தான் இந்த அனுகீர்த்தி. மேலும் இவர்களுடன் நடிகர் கலையரசன் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மகளை தொலைத்துவிட்ட ஒரு தந்தையின் தேடலை கதைக் கருவாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட உள்ளதாகவும், மதியழகன் மகளாக யார் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். மகள் மற்றும் தந்தைக்கு உடனான பாச பிணைப்பில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படம் எவ்வாறான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.