தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் பிற மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் கால்பதித்து வெற்றியும் அடைந்துள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து இந்த வரிசை தொடர்ந்தது.அதை தற்போது காணலாம்!
1.ரஜினிகாந்த்:
1975 ஆம் ஆண்டு வெளியான “அபூர்வராகங்கள்”படத்தின் மூலம் இயக்குனர் கே.பாலச்சந்தரால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்பு அதற்கு அடுத்த வருடம் கன்னட படத்தில் நடித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக கால்பதித்து இன்று தமிழ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படங்கள் தமிழில் ஏராளம். ஆரம்ப காலத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த ரஜினியை கமலஹாசனே தனியாக படம் நடிக்குமாறு பரிந்துரை செய்தார். இன்றும் ரஜினி கமலின் இந்த பரிந்துரைக்கு நன்றி கூறுவார். பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் திரைத்துறைக்கு அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.
2. அர்ஜுன் சர்ஜா:
மைசூரில் பிறந்த நடிகர் அர்ஜுன் தனது நடிப்பில் அதிக கோலிவுட் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சின்ன சின்ன வேடங்களில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கிய அர்ஜுன் ஸ்டன்ட் மேன், வில்லன் கதாபாத்திரத்திலிருந்து உயர்ந்து ஹீரோவாக கால் பதித்தார். பல ஆக்சன் தமிழ் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவரை “ஆக்சன் கிங் அர்ஜுன்” என்று அழைத்தார்கள். ஷங்கர் இயக்கத்தில் உருவான “ஜென்டில்மேன்” படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். சினிமா பின்னணியில் உள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன் சொந்த முயற்சியால் மட்டுமே அர்ஜுன் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ளார். தற்போது நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
3. பிரகாஷ்ராஜ்:
சிறந்த குணச்சித்திர நடிகர் என்று இன்று கூறினாலும் அதில் நடிகர் பிரகாஷ்ராஜின் பெயர் முதலிடத்தில் இருக்கும். வில்லன் கதாபாத்திரத்தில் தொடங்கி ஒரு தந்தையாக நடிப்பதிலிருந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக நடிப்பதில் வல்லவர் பிரகாஷ்ராஜ். இவர் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இந்த நடிகர் தமிழில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
4. மோகன்:
பெங்களூருவில் பிறந்த நடிகர் மோகன் பாலுமகேந்திரா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான “கோகிலா” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கன்னடத்தில் “கோகிலா மோகன்” என்று அழைக்கப்படுவார். தமிழில் 1980 ஆம் வருடம் வெளியான “மூடுபனி” படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இவர் “சில்வர் ஜூப்ளி ஸ்டார்” என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து மேடை பாடல்கள் தொடர்பான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவரை “மைக் மோகன்” என்று அழைத்தார்கள். எஸ்என் சுரேந்தர் எனும் வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான் மோகனின் அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். மோகனின் 75 படங்களுக்கு மேல் இவர்தான் டப்பிங் செய்தார்.
5. முரளி:
பிரபல கன்னட இயக்குனர் சித்தலிங்கையாவின் மகனான நடிகர் முரளி 1984-ம் வருடம் வெளியான “பூவிலங்கு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல வெற்றி தமிழ் படங்களில் நடித்து வந்த இந்த நடிகர் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பகல்நிலவு” படம் நடிகர் முரளிக்கு சினிமாவில் மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்திலிருந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் அமைந்தது. இவரது மகன் அதர்வா முரளி தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.