டொரண்டோ தமிழ் இருக்கை தூதர்-இமான்!

  • June 20, 2020 / 04:04 PM IST

உலக மொழிகளில் பழமையான மொழி என்று போற்றப்படும் நம் தமிழ்மொழி செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றது. மேலும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று “கம்யூனிட்டி இருக்கை” என்று தனி இடம் ஒதுக்கி உள்ளது. இதை அமைப்பதற்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும், தமிழக அரசிடமிருந்து, அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நிதி திரட்டி இந்த இருக்கை அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களும் “டொரண்டோ” எனும் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று “கம்யூனிட்டி இருக்கை” ஒன்றை அமைக்க முடிவு செய்து எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கம்யூனிட்டி இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டியுள்ளது. மீதம் 9 கோடி மட்டுமே வேண்டிய நிலையில் தமிழகத்தில் இந்த நிதியை திரட்ட முடிவு செய்தது. இதற்கான தூதராக இசையமைப்பாளர் டி .இமானை நியமித்தது.

இதைப் பற்றி பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில்”உலகில் தொன்மையான மொழி என்று போற்றப்படும் தமிழ் மொழி வாய்வழி தொடர்பு மொழி மட்டுமல்லாது, தமிழகத்தின் கலாச்சாரம், வாழ்வியல், நாகரீகம் என்று அனைத்தையும் தன்னுள் அடக்கியதாகும். மொழிகளின் தாய் தமிழ் மொழி என்று கூறப்படுவதில் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்கிறேன். டொரண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நியமிக்கப்பட்ட போது இதையெல்லாம் எண்ணி பெருமை கொண்டேன்.

கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான டொரண்டோவில் தமிழுக்கென்று இருக்கை அமையவிருப்பது உலகெங்கும் உள்ள அனைத்து தமிழருக்கும் பேருவகை தரும் செய்தியாகும். டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பினர் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவம் தாய்மொழி மீது எனக்கு இருக்கும் ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பொழுது அனைவரும் நெருக்கடியான சூழ்நிலையில் தான் இருக்கிறோம் இருப்பினும் உங்களால் இயன்ற உதவியை www.learntamil.ca என்ற இணையதளத்திற்கு சென்று அளித்து கரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus