முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் இன்று (பிப்ரவரி 24-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை கோவையிலுள்ள கங்கா – யமுனா – காவேரி திரையரங்கம் முன்பு மர்ம நபர்கள் சிலர் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கிருந்த சில அஜித் ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.