‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 15-ஆம் தேதி) தான் நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், நேற்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். தற்போது, இது தொடர்பாக காமெடி நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில் “இன்னைக்கு காலைல என்னுடைய நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்துட்டான்ங்குற செய்தியை கேள்விப்பட்டு ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன்.
அவனும் நானும் நிறைய படங்கள்ல இணைஞ்சு பணியாற்றியிருக்கிறோம். அவன பத்தி பேசும்போது துக்கம் தொண்டைய அடைக்குது எனக்கு. ரொம்ப நல்லவன். பொதுநல சிந்தனை அதிகமா இருக்கு அவனுக்கு. அப்துல் கலாம் ஐயாவுடன் ரொம்ப நெருக்கமா இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரத்தை நடுவது. இப்படி எவ்ளோவோ விஷயம் பண்ணுவான். அவனை மாதிரி ஓப்பனா பேசக் கூடிய ஆளேக் கிடையாது. அவன் என்னைவிட எதார்த்தமா, எளிமையா பேசுவான். அவனுக்கு இப்படி ஒரு மரணம் வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல” என்று கூறி அழுகிறார்.