‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள புதிய காமெடி படமான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ நேற்று (டிசம்பர் 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியுள்ளார்.
இதில் முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ராவ் ரமேஷ், பிரஷாந்த், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.02 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.