‘ஆதவன்’ படத்துக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா – வடிவேலு காம்போ… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடிக்கிறார். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 15-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்தில் காமெடியில் அசத்த ‘வைகைப்புயல்’ வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் சூர்யா – வடிவேலு இணைந்து நடித்து நம்மை சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Share.