தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது கடவுளா? கொரோனாவா? – வைரமுத்து கவிதை
May 11, 2020 / 09:07 AM IST
|Follow Us
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தீராத வேளையில், அந்த நோய் குறித்து வைரமுத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. மே 17ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ளது. அதை தாண்டி நீட்டிக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் பரவியதில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
நேற்று மாலை வரை தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 6535 ஆக இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 3330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா தொற்றை முன்வைத்து வைரமுத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். ‘தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்’ என்று தன் கவிதைக்கு பெயரிட்டுள்ளார். அந்தக் கவிதை இதோ:
ஞாலமளந்த ஞானிகளும்
சொல்பழுத்த கவிகளும்
சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்
கொரோனா சொன்னதும்
குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.
உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்
இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு
நுரையீரல்தான் நொறுக்குத் தீனி
அகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்
தட்டுக்கெட்ட கிருமியின்
ஒட்டுமொத்த எடையே
ஒன்றரை கிராம்தான்
இந்த ஒன்றரை கிராம்
உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்
உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!
சாலைகள் போயின வெறிச்சோடி
போக்குவரத்து நெரிசல்
மூச்சுக் குழாய்களில்.
தூணிலுமிருப்பது
துரும்பிலுமிருப்பது
கடவுளா? கரோனாவா?
இந்த சர்வதேச சர்வாதிகாரியை
வைவதா? வாழ்த்துவதா?
தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த
நெல்லிக்காய் மனிதர்கள் இன்று
நேர்கோட்டு வரிசையில்
சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை
இன்று வட்டத்துக்குள்
உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று
உண்ணு முன்னே
புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை
இன்றுதான்
முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது
மாதமெல்லாம் சூதகமான
கங்கை மங்கை
அழுக்குத் தீரக் குளித்து
அலைக் கூந்தல் உலர்த்தி
நுரைப்பூக்கள் சூடிக்
கண்சிமிட்டுகின்றாள்
கண்ணாடி ஆடைகட்டி.