தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா. இவர் ’16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
பாரதிராஜா நடிகராக ‘ஆய்த எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, ஈஸ்வரன், ராக்கி, குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘திருச்சிற்றம்பலம்’.
தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது, டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில், MGM மருத்துவமனையில் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக பாரதிராஜா இன்று மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ‘கவிப்பேரரசு’ வைரமுத்து மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “பாரதிராஜா நலமோடு இருக்கிறார். அவருக்கு நெஞ்சில் கொஞ்சம் சளி இருக்கிறது.
அது விரைவில் சரி செய்யப்படும் என்று மருத்துவர் குழு தெரிவித்திருக்கிறது. நுரையீரலில் சற்றே நீர் சேர்ந்திருக்கிறது. அதுவும் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டிருக்கிறது. அவர் நன்றாக பேசுகிறார். அடையாளம் கண்டு கொள்கிறார். நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்” என்று கூறியுள்ளார்.