தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.
நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில் “எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. பின், மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் லேசான அளவில் ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்க என்று சொன்னார்கள்.
இருப்பினும் நான் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். இப்போது நான் நலமாக உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது, இது தொடர்பாக பிரபல பாடலாசிரியர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒன்றா? இரண்டா என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் பாடும் நிலா பாலு. விரைவில் அவர் மீளவும் காற்றை அவர் குரல் ஆளவும் காத்திருக்கிறேன் – பால்மழைக்குக் காத்திருக்கும் பூமியைப் போல்… பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியைப் போல். #SPBalasubrahmanyam #SPB” என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்றா? இரண்டா?
என் தமிழை
அதிகம் கூவிய ஆண்குயில்
பாடும் நிலா பாலு.
விரைவில் அவர் மீளவும்
காற்றை அவர் குரல் ஆளவும்
காத்திருக்கிறேன் –பால்மழைக்குக் காத்திருக்கும்
பூமியைப் போல்…
பண்டிகைக்குக் காத்திருக்கும்
சாமியைப் போல்.#SPBalasubrahmanyam #SPB— வைரமுத்து (@Vairamuthu) August 6, 2020