தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை”. ஏற்கனவே இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக அமையும் என்று திரைப்படக் குழு ஏற்கனவே கூறியிருந்தது. இந்தப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியிலும், சென்னையிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஆக்ஷன் காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வந்த புதிய தகவல் என்னவென்றால் வலிமை படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா நிலைமை சரியாகவில்லையென்றால் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட வேண்டிய காட்சிகள் சென்னையிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நடிகர் அஜித் கொரோனா நிலைமை சரியாகும் வரை படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்ததாகவும், தற்போது நிலைமை சரியாகி வருவதால் நவம்பர் மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்க படலாம் என்றும் செய்தி வந்துள்ளது. வருகிற 2021 கோடை விடுமுறையில் இந்தப் படம் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தி தெரிவித்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “வலிமை” திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் ஹூமா குரேஷி நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.வலிமை திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.