“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா”… லிங்குசாமி குறித்து வசந்தபாலனின் உருக்கமான பதிவு!

  • May 15, 2021 / 09:42 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த பாலன். ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்த பாலனின் புதிய படமான ‘ஜெயில்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ‘கைதி’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வந்தார் வசந்த பாலன். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, இயக்குநர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்” என்று கூறியிருந்தார்.

தற்போது, வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் “வீரம் என்றால் என்ன ? பயமில்லாத மாதிரி நடிக்கிறது. பழைய வசனம். வீரம் என்றால் என்ன தெரியுமா? பேரன்பின் மிகுதியில் நெருக்கடியான நேரத்தில் அன்பானவர்கள் பக்கம் நிற்பது. புதிய வசனம். போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்மருத்துவமனைத் தேடி விரைகிறது.

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது. உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது. வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது. எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது மருத்துவரா இல்லை, செவிலியரா
என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. உள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன். ‘லிங்குசாமிடா’ என்றது அந்த குரல். அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி ‘டே! நண்பா’ என்று கத்தினேன். ‘பாலா’ என்றான். அவன் குரல் உடைந்திருந்தது. வந்திருவடா… ‘ம்’ என்றேன்.

என் உடலைத் தடவிக்கொடுத்தான். எனக்காக பிரார்த்தனை செய்தான். என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது. தைரியமாக இரு என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும் போது, யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது. இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே பின்னே ஓடியது. ‘உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா…..’ என்றேன். நானிருக்கிறேன் நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு….. ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus