பழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்தி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் ஐசியூவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.
ஜெயந்தி என்று அழைக்கப்படும் கமலா குமாரி கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960களில் ஆரம்பித்து 1980கள் வரை இவர் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தார். இவர் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவரை மிகவும் “தைரியமான மற்றும் அழகான நடிகை” என்று பலர் குறிப்பிடுவார்கள். இவரது சிறந்த நடிப்பை பாராட்டி “அபிநய சாரதே” என்று பட்டம் அளித்தார்கள். இவர் பல பட்டங்களை பெற்றுள்ளார்.
இவர் நேற்று மூச்சுத் திணறல் காரணமாக அவசர அவசரமாக அவரது மகன் கிருஷ்ணகுமாரால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அது நெகட்டிவாக வந்துள்ளது. இவருக்கு 30 வருடமாகவே ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதனால் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது மகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது சிகிச்சையால் ஜெயந்தியின் உடல் நலம் சீராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஒரு வருடம் முன்னரே இதேபோல் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. பின்பு அவர் மகன் அது வெறும் வதந்தி என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் படகோட்டி மற்றும் முகராசி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் ஜெமினி கணேசனுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.