சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பத்து தல’. ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படம் நேற்று (மார்ச் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இப்படம் கன்னட திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காம். இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் மேனன், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடித்துள்ளார்கள்.
இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. நேற்று இப்படத்தை பார்க்க சென்னை ரோகிணி திரையங்கிற்கு டிக்கெட் எடுத்துச் சென்ற நரிக்குறவ சமூகத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்த வீடியோ வைரலாக பரவி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டாலும், டிக்கெட் பரிசோதகர்கள் ராமலிங்கம், குமரேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.