தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘குஷி, திருமலை’ ஆகிய படங்களில் விஜய் – ஜோதிகா ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.