Vijay & Tamilaga Vettri Kazhagam : “தமிழக வெற்றி கழகம்”… தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

  • February 2, 2024 / 02:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். ‘விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

‘எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus