கொரோனா நிதி: விஜய்யிடம் பணம் இல்லையா…? மனமில்லையா..?

  • April 22, 2020 / 08:15 PM IST

சூப்பர் ஸ்டார் முதல் ஹரிஷ் கல்யாண் வரை அனைவரும் கொரோனா நிதியை அளித்துள்ள நிலையில் விஜய் மட்டும் எந்த நிதியையும் அளிக்காமல் இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்….?

கொரோனா கோரத்தாண்டவத்தில் அனைவரும் சிக்கி சின்னாபின்னாகி வருகிறார்கள். உயிரை இழப்பது ஒரு வகை என்றால், உயிர் வாழ அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலையில் தவிப்பவர்கள் மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையில் சிக்கியுள்ளவர்கள் பெரும்பாலும் LOWER MIDDLE CLASS வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் FEFSI தொழிலாளர்கள். சினிமா என்னும் பெரிய சக்கரம் இயங்கினால் தான், சிறு சக்கரங்களான அதனை சார்ந்த யூனியன்களும் சங்கங்களும் இயக்கும். இப்போது சினிமாத்துறை எனும் பெரிய சக்கரம் இயங்காமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான FEFSI தொழிலாளர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.

இவர்களுக்கு உதவும் படி அச்சங்கத்தின் பிரதான பிரதிநிதி ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்தவுடன், பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து செய்து வருகின்றனர். ரஜினிகாந்த், அஜித், லாரன்ஸ், சிவகார்த்திகேயன், யோகிபாபு, நயன்தாரா, பார்வதி நாயர் என ஏராளமானோர் பணமாகவும், அத்தியாவசிய பொருட்களாகவும் வழங்கி தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைவரின் பார்வையும் ஒரே நடிகரை நோக்கி தான் உள்ளது… அதுவேறு யாரும் இல்லை நம்ம தளபதி விஜய் அவர்கள் மீது தான். அடுத்த சூப்பர்ஸ்டார், அடுத்த முதல்வர் என அவர்களது ரசிகர்களால் போற்றப்படும் விஜய், ஏன் இதுவரை ஒரு ரூபாய் கூட FEFSI தொழிலாளர்கள், முதலமைச்சர் கொரோனா நிதி அல்லது பிரதமரின் கொரோனா நிதிக்கு வழங்கவில்லை என்பதுதான் அனைவரின் ஆச்சர்ய கேள்வியாகவுள்ளது.

படங்களில் சீனுக்கு சீன் வீர வசனம், சமுதாய கருத்துகளை பேசும் விஜய் அவர்கள் இன்னும் ஏன் உதவி செய்யவில்லை என அவரை ட்ரோல் செய்பவர்கள் கூட கேலியாக கேட்கிறார்கள். ஏன்.. அவரது ரசிகர்களே வெளியே சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் மனதிலும் உள்ள கேள்வியும் இதுதான். விஜய்யிடம் பணமில்லையா அல்லது மனமில்லையா..?, உண்மையில் என்னதான் பிரச்சனை அவருக்கு…!

சமீபத்தில் நடைபெற்ற ரெய்டில் விஜய்யின் சொத்து விபரங்கள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளின் வசம் உள்ளதாகவும், பிகில் சம்பளத்தை மறைத்து வருமானவரி கணக்கு காட்டியது, தொடர்பாக அவர் செலுத்திய அபராத தொகையே பெருமளவு என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படம் அவரின் உறவினர் தயாரிப்பதாக கூறினாலும், அதில் விஜய்யின் சொந்த பணம் பெருமளவு சிக்கியுள்ளதாகவும், தற்போது அந்த படம் வெளியாகாததால், விஜய்க்கு பெரிய அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவுமில்லாமல் மாஸ்டர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸும் அவர்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்ப கேட்பதால் விஜய் தரப்பு செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுவுமில்லாமல் அரசு தரப்பையும் விஜய் முறைத்து கொண்டுள்ளதால், அவரின் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுவுமில்லாமல் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சர்வதேச நிதி பரிவர்த்தனை செய்யும் தொடர்பும் விஜய்க்கும் இருப்பதாக லோக்கல் பாஜக பிரமுகர்களும் கிளிப்பி விட, மத்திய அரசும் விஜய்யின் செயல்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மேலும் அவரின் படங்களில் பெருமுதலாளிகளையே தொடர்ந்து தாக்குவது போல வசனங்களையும் காட்சிகளையும் வைப்பதால், விஜய்யை சிக்க வைப்பதில் அவர்களின் பங்கும் கணிசமான அளவு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நேரடியாக நிதி இதுவரை அளிக்கவில்லை என்றாலும், அவரின் ரசிக மன்ற அமைப்புகளின் மூலமாக பல லட்சம் மதிப்பிலான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிகிறது. “எனது சேவை மக்களிடம் நேரடியாக போய் சேரும்” என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜய் கூறி வருவதாகவும் தகவல். இந்திய அளவில் அக்ஷய் குமார், பிரபாஸ், ஷாருக்கான், உள்ளிட்டோர் பெரும் தொகையை அளித்து மக்களை பிரமிக்க வைத்துள்ள நிலையில், விஜய் விரைவில் யாரும் எதிர்ப்பார்க்காத மிகப்பெரிய தொகையை அளித்து அனைவரையும் தெறிக்கவிடுவார் என்று தற்போதும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டுள்ளனர். ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியாத விஜய்யின் தற்போதைய நிலை..!

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus