பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்… வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

  • January 16, 2021 / 04:11 PM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 14 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜனவரி 16-ஆம் தேதி) நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இயக்குநர் பொன்ராம் டீமுடன் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த ஸ்டில்லில் விஜய் சேதுபதி பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியை வைத்து வெட்டியதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது, இது தொடர்பாக விஜய் சேதுபதி ட்விட்டரில் “வணக்கம், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus