கன்னட திரையுலகில் 2004-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தர்ஷன்’. இந்த படத்தில் ஹீரோயினாக நவ்நீத் கௌர் நடித்திருந்தார். இது தான் நவ்நீத் கௌர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இவர் சில தெலுங்கு படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் நவ்நீத் கௌர். தமிழில் ‘அரசாங்கம்’ என்ற படத்தில் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.மாதேஷ் இயக்கியிருந்தார்.
‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தில் நடித்தார் நவ்நீத் கௌர். கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி பஞ்சாபி மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில், நடிகை நவ்நீத் கௌர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, எனது மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் சிலருக்கும் கொரோனா தொற்று இருக்கிறது.
நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். பின், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, நவ்நீத் கௌருக்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் நவ்நீத் கௌர் எம்.பி-யாகவும், அவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ-வாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.