நடிகர் விஜயகாந்திற்கு ‘கொரோனா’ பாதிப்பா?… தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கை!

  • September 24, 2020 / 11:33 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக விஜயகாந்த் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus