தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘வாரிசு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசையமைக்கிறார். படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் (டிசம்பர் 24-ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் பேசுகையில் “வாரிசு உறவுகளை பற்றிய படம்ங்கறனால, உறவுகளை வச்சே ஒரு குட்டி கதை ஒன்னு சொல்றேன். ஒரு குடும்பம், அதுல அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி இருந்தாங்க. அப்பா தினமும் வேலைக்கு போயிட்டு வரும்போது ரெண்டு சாக்லேட் வாங்கிட்டு வருவாரு. அந்த சாக்லேட்டை அவரோட ரெண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பாரு.
தங்கச்சி பாப்பா அந்த சாக்லேட்டை உடனே சாப்பிட்ருவா. அண்ணன் அடுத்த நாள் அந்த சாக்லேட்டை ஸ்கூலுக்கு எடுத்துட்டு போனும்ங்குறதுக்காக, அதை ஒரு இடத்துல மறைச்சு வைப்பாரு. ஆனா, அண்ணன் மறைச்சு வச்சிருந்த சாக்லேட்டையும் எடுத்து தங்கச்சி பாப்பா சாப்பிட்ருவா. இது வழக்கமா நடந்துக்கிட்டே இருக்கு. ஒரு நாள் அந்த தங்கச்சி பாப்பா தன்னோட அண்ணன்கிட்ட, இந்த அன்பு அன்புன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன அண்ணா?-ன்னு கேட்குறா.
அதுக்கு அந்த அண்ணன், நீ உன்னோட சாக்லேட்டையும் சாப்பிடுற, நான் மறைச்சு வைக்குற சாக்லேட்டையும் சாப்பிடுற. ஆனா, நீ சாப்பிடுவேன்னு தெரிஞ்சும், தினமும் திரும்ப திரும்ப அதே இடத்துல கொண்டுபோய் நான் வைக்கிறனே, அது தான்மா அந்த உண்மையான அன்பு. எப்பவுமே உலகத்தை ஜெயிக்க கூடியது இந்த அன்புதாங்க” என்று பேசினார்.